Tirumangaiyazhwar
திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் நள வருடம், கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருமாலின் சாரங்கம் என்ற வில்லின் அம்சமாக திருக்குறையலூர் என்ற ஊரில் ஆலிநாடர் என்ற சோழ மன்னனின் படைத்தளபதிக்கும், அவரது துணைவியார் அல்லித்திரு என்பவருக்கும் மகனாக அவதரித்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் நீலன்.

நீலன் தமிழிலும், வடமொழியிலும் புலமை பெற்று வாள், வேல், வில் முதலிய படைக்கலங்களையும் கற்று சிறந்த வீரனாக விளங்கினான். இதனால் சோழ மன்னன் நீலனை "திருமங்கை" என்னும் நாட்டிற்குச் சிற்றரசனாக்கினான்.

திருமாலுக்கு வெண்சாமரம் வீசும் பணிப்பெண்ணாகிய சுமங்கலை என்பவள் ஒரு முனிவரின் சாபத்தால் திருநாங்கூரில் ஒரு மானிடப் பெண்ணாக அல்லி மலர்க்குளத்தில் அவதரித்தாள். ஒரு வேதியரால் கண்டெடுக்கப்பட்டு குமுதவல்லி என்ற பெயாpட்டு வளர்க்கப்பட்டாள். நீலன் வேதியரின் வீட்டுக்குச் சென்று அவளை மணம்புரிய விரும்புவதாகக் கூற, அதற்கு அவள் போர் வெறியை மறந்து திருமாலின் அடியாராக மாறி, ஓராண்டு காலம் தினமும் 1008 வைணவ அடியார்க்கு அமுது படைத்தால் திருமணம் செய்து கொள்வதாக நிபந்தனை விதித்தாள். நீலன், நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு குமுதவல்லியை மணந்து, தினமும் 1008 அடியார்களுக்கு அமுது படைத்து வந்தான்.

அதனால் அவனுடைய செல்வம் கரைந்து, சோழ மன்னனுக்குக் கப்பம் கட்ட முடியாமல் போக, கோபம் கொண்ட சோழ மன்னன் நீலனைச் சிறை பிடித்தான். சிறையில் வாட்டமுற்றிருந்த நீலன் கனவில் திருமால் தோன்றி, காஞ்சிபுரத்திற்கு வந்தால் அங்கிருக்கும் புதையலை எடுத்து மன்னனின் கப்பத்தைக் கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தைக் கொண்டு அடியவர்க்கு அமுது இடும் பணியை திரும்பத் தொடங்கலாம் என்று கூறினார். நீலனும் மன்னனின் அனுமதி பெற்று காவலர்களுடனும், அமைச்சர்களுடனும் காஞ்சிபுரம் சென்று வரதராஜப் பெருமாளை வணங்கி, வேகவதி நதிக்கரைக்குச் சென்று, அங்கிருந்த புதையலைத் தோண்டி எடுத்து மன்னனுக்குக் கப்பம் கட்டி விட்டு மீண்டும் திருமங்கைக்குச் சென்று அடியார்க்கு அமுது படைக்கும் பணியைத் தொடங்கினார்.

சிறிது காலத்தில் நீலனுக்கு மீண்டும் பணப்பற்றாக்குறை ஏற்பட, வழிப்பறியில் ஈடுபட்டு அடியவர்க்கு அமுது படைக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். திருமால் ஆழ்வாரை ஆட்கொள்ள நினைத்து, பிராட்டியுடன் புதுமணத் தம்பதிகளாக ஆபரணங்களை அணிந்து காட்டு வழியே பல்லக்கில் வந்தார்கள். அப்போது, வழிப்பறியில் ஈடுபட்டிருந்த நீலன், அவர்களிடமிருந்த எல்லா ஆபரணங்களையும் பறித்துக் கொண்டான். திருமாலின் விரலில் உள்ள கணையாழி சற்று இறுகி இருந்ததால் நீலனிடம், "கணையாழியை நீயே கழற்றிக் கொள்" என்று கூறிவிட்டு, பிராட்டியிடம் திரும்பி, "நம் கலியனுக்காக எல்லாவற்றையும் கொடுப்போம்" என்றார்.

தனது மற்றொரு பெயரை அந்த தம்பதிகள் எவ்வாறு அறிந்தனர் என வியப்புற்று, நீலன் நகைகளை மூட்டையாகக் கட்டி தூக்க முயன்றான். மூட்டையை தூக்க முடியாமல் போக, திருமாலைப் பார்த்து "நீ ஏதோ மந்திரம் போட்டு விட்டதால் மூட்டையை தூக்க முடியவில்லை. அந்த மந்திரத்தை எனக்கும் சொல்" எனக் கோபத்துடன் கூறினான். திருமால் மனமுவந்து நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை ஓதினார். அன்றிலிருந்து நீலன், "திருமங்கையாழ்வார்" என்று பெயர் பெற்றார்.

திருமங்கையாழ்வார் குமரி முதல் இமயம் வரை யாத்திரை சென்று 108 திவ்ய தேசங்களில் 86 திருத்தலங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இவர் திருமாலைப் போற்றி 20 பாசுரங்களைக் கொண்ட திருக்குறுந்தாண்டகம், 30 பாசுரங்களைக் கொண்ட திருநெடுந்தாண்டகம், 1084 பாசுரங்களைக் கொண்ட பெரிய திருமொழி, 40 பாசுரங்களைக் கொண்ட சிறிய திருமடல், 78 பாசுரங்களைக் கொண்ட பெரிய திருமடல், 1 பாசுரத்தைக் கொண்ட திருவெழுகூற்றிருக்கை முதலிய ஆறு பிரபந்தங்களைப் பாடினார். இவை 1253 பாசுரங்களை உடையது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வாருக்கு அடுத்தபடியாக இவருடைய பாசுரங்கள்தான் அதிகம். ஆசுகவி, மதுரகவி, விஸ்தாரகவி, சித்திரகவி என்ற நான்கு விதமான கவிகளை இயற்றியதால் "நாலுகவிப் பெருமாள்" என்று பெயர் பெற்றார்.

பெரிய திருமொழி குறுந்தாண்டகம் நெடுந்தாண்டகம்
சிறிய திருமடல் பெரிய திருமடல் திருவெழுகூற்றிருக்கை

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.